Wednesday, 1 June 2016

Vallalar Varalaru Contd....(Last days in Chennai)


திருஒற்றியூர் தியாகேச பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றொரு பெயருண்டு.  அந்த  "எழுத்தறியும் பெருமான் மாலை"-யில்

"சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்கோன் ஆக்காதே
நிந்தைஉறு  நோயால் நிகழவைத்தல் நீதியதோ?
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே."

"மைப்படியுங் கண்ணார் மயலுழக்கச் செய்வாயோ?
கைப்படிய உன்தன் கழல்கருதச் செய்வாயோ?
இப்படியென்(று) அப்படியென்(று) என்னறிவேன் உன்சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே..."

என்னும் பாடல்களில் , தம் தீவினைகளுடன் தான் படும் போராட்டத்தில் வெற்றிபெற அருள் புரியுமாறு தியாகேச பெருமானிடம் வேண்டுகிறார்.
இந்நிலையில் தான் குழவி பருவத்தில் தலையசைத்து வாய்விட்டு சிரித்து திரை நீங்கி அருள்பெற்ற, தில்லை நடராசரின் நினைவில் அவரது உள்ளம் நிரம்பி இருந்தது.  சுற்று சூழலோ, திருவொற்றியூரிலேயே இருக்குமாறு வற்புறுத்தியது .  தனது மனக்குழப்பத்தை தெளிவிக்குமாறு தியாகேசரிடம்,

"அல்லல் என்னைவிட்டு அகன்றிட வொற்றி 
அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர் 
தில்லைமேவவோ அறிந்திலன் சிவனே !" 

என முறையிடுகின்றார்.

திருவொற்றியூர் செல்லும் காலத்து வெள்ளை உடையை இராமலிங்கர் உடுத்தியுள்ளார்.  மேலும் இவர் தாம் உடுத்தும் வெள்ளை உடையை முழங்கால் மறையுமளவிற்கே உடுத்துவார்.  தம்உடம்பை  பிறர்க்கு தெரியாதபடி மேலாடையால் முக்காடிட்டுப் போர்த்தியிருப்பார்.  இது பற்றி இராமலிங்கர்  பாடியுள்ள பாடலில்
                                                    "கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன் "

தான் வீதிகளில் செல்லுமிடத்து தலைகுனிந்து கைகட்டி ஓரமாய் அடக்கமே உருவாய் செல்வதைக் குறிப்பிட்டுள்ளார்.

இராமலிங்கர் 1858-ம் ஆண்டு முதல் கருங்குழி, வடலூர், மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களில் வாழ்ந்துள்ளார்.  அங்கு வாழும் காலத்தில் தமக்கு தேவைப்பட்ட வெள்ளை 'லாங்க்லாத்' (longcloth) துணியை நண்பர் இறுக்கம் இரத்தின முதலியாரிடம் கடிதம் மூலம் எழுதிக் கேட்டுள்ளார் .

27.05.1860-ல் எழுதிய கடிதத்தில்

"அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங்க்லாத் பீஸ்(piece) வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தை பின்பு செலுத்திவிடலாம். இதற்கு பிரயாசம் வேண்டாம்." --என

அவர் எழுதியதன் மூலம் இராமலிங்கர் வெள்ளையாடை உடுத்தி வந்துள்ளார் என்பது தெரியவருகிறது.

இராமலிங்கரின் அன்னை சின்னம்மைக்கு வயதின் காரணமாகவும், மகனுக்கு திருமணம் செய்து வைத்த பின்பும் "இப்படி விருப்பம் இன்றி இருக்கின்றானே!"
என்ற கவலையும் அழுத்த, அடிக்கடி அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.  இராமலிங்கரின் அண்ணன் பரசுராமன் அன்னையின் அருகிலிருந்து கவனித்து வரலானார்.

பொன்னேரியில் சின்னம்மையின் உடல்நிலை மிக மோசமடைய, அவர் வாயில் குடும்பத்தினர் பாலை ஊற்றினர்.  அன்பு  மகன் இராமலிங்கரும் பாலை ஊற்றினார்.  அன்னையின் உயிர் மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.  தாயின் மார்பில் ஒரு கையையும், தலையில் ஒரு கையையும், வைத்தார், திருவாசகம் சொல்லத் தொடங்கினார். அன்னையின் உயிர் பிரிந்தது.  அனைவரையும் திருவாசகம் பாராயணம் செய்யுங்கள் என்றார்.  பிறகு வழக்கப்படி இறுதி சடங்கு முடிந்தது.  தனிமையில் இராமலிங்கர் அனைத்தையும் துறந்த நிலையில் அவர் மனம் இறைவனையே நாடியிருந்தது.

எப்போதும்போல் இறைபணியை தொடர்ந்தார்.  சாதி, சமய, போலி ஆசாரங்களை சாடி, ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி அங்காங்கே உரையாற்றினார்.  சில இடங்களில் எதிர்ப்பும், சில இடங்களில் ஆதரவும் இருந்தது.

19-ம் நூற்றாண்டில் சாதி, சமய, சம்பிரதாயம் போன்றவற்றில் மக்கள் மனம் மூழ்கி கிடந்தது.  இராமலிங்கர் அதை தீவிரமாக எதிர்த்தார். சமயங்கள், மதங்கள் பெயரால் மக்கள் வேறுபட்டிருந்தனர்.  அதனால் மக்களின் பண்பாடும், முன்னேற்றமும் தடைபட்டு கிடந்தது.  அதனால் இராமலிங்கர் ஜீவகாருண்யத்தை முன்னிறுத்தி தனி வழி காண விரும்பினார்.

சமய மற்றும் சமூகத்திலும் பெரும் சீர்த்திருத்தங்கள் வர வேண்டும், மக்கள் மனதில் உள்ள மூடப்பழக்கங்கள் மண்மூடி போக வேண்டும் என பாடுபட்டவர் நமது வள்ளலார்.  மக்களின் அறியாமை நீங்கி அனைவரிடமும் அன்புநெறியும் சமத்துவநெறியும் பரவவேண்டும் என சொற்போரும், சொற்பொழிவும் நடத்தினார்.  ஆன்மநேய ஒருமைபாட்டுரிமைத் தத்துவத்திற்கு மேலானது வேறு இல்லை என்பது வள்ளலாரின் கருத்து.  எவ்வுயிரும் தம்முயிர்போல் நினைப்பவர்களால் தான் சர்வதேச ஒருமைப்பாட்டிற்கு வழிவகை காண முடியும் என போதித்தார்.  மக்களின் மூடநம்பிக்கையை ஒழித்து, அவர்களை அறியாமையிலிருந்து வெளிக்கொணர பல்வேறு தரப்பினரிடையே எழுந்த கருத்து வேறுபாடுகளையும் களைந்து தனிக் கொள்கையை வகுத்தார்.  தானும் அந்த கொள்கை வழி நடந்தார்.  வள்ளலார் சென்னையிலிருந்த காலத்தில் அவரது மாணவர் வேலாயுதனார் உடனிருந்தார்.  வள்ளலார் சிதம்பரம் செல்ல முடிவு எடுத்த பின் இவர் எப்பொழுதாவது வள்ளலாரை காண செல்வார்.  நெருங்கிய தொடர்பு இல்லை.