சைவ கட்டுரைகள்
தலைப்பு : அன்பே சிவம்
அன்பு இல்லாத நெஞ்சத்தில் அருள் சுரக்காது. அன்பு என்னும் தாயிடம் பிறக்கும் குழந்தையே அருள் என்பதை திருவள்ளுவர்,
"அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்று தெளிவாக்கியுள்ளார் .
அன்பு, கருணை என்பது மனித இனத்துக்கு அடிப்படையாய் இருக்க வேண்டிய பண்பு. இது ஆன்மிகம் கலந்த நிலையில் இறையன்பாக வெளிப்படுகிறது. "ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என வள்ளலார் கூறுகின்றார். உயிர் இரக்கமே 'ஆன்மநேய ஒருமைப்பாடு' என வள்ளலார் குறிப்பிடுகின்றார். யார் ஒருவர் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை தவறாமல் கடைபிடிக்கின்றார்களோ அவர் மனதில் இறைவன் கோயில் கொண்டுள்ளார் என்பது திண்ணம். தூய எண்ணம் கொண்ட உள்ளம்; அதில் நிறைந்திருக்கும் களங்கமற்ற அன்பு ; எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்கும் ஆன்ம நேயம்; இவை நிரம்பிய மனதில்தான் இறைவன் நிலைத்திருக்கின்றார், என்பது திருஅருட்பிரகாச வள்ளலார் வாக்கு. அன்பு உள்ளத்தால் மட்டுமே பிற உயிர்களின் துன்பங்களை உணர முடியும். அதனால் தான் வள்ளலாரின் அருள் சுரந்த அன்பு உள்ளம் "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்." என்று பாடியது.
மேலும் அவர் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" என்று அருளி,
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம்பொருளே!
அன்பெனும் கரத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே!
அன்புருவாம் பரசிவமே!" ----என்று
தமது இறையனுபவத்தைக் கூறுவதைக் காணலாம்.
நாயன்மாருள் அன்பே சிவம் என்பதை முதன் முதல் வரையறுத்து கூறியவர் திருமூலர்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே!
இப்பாடல் வழி, அன்பே சிவம் என்பதும், அன்பு நெறியே சைவநெறி, என்பதும் தெளிவாகின்றது.
மனக் கோயிலில் அன்பாம் சிவம் அமரும்போது, தெய்வத் தன்மை திகழும்;
ஆணவம் ஒடுங்கும்; நீரில் பாசி விலகுதல் போல் மலமாயை விலகும் .
பெரியபுராணத்தில் பல்வேறு தரப்பினர் இறையருள் பெற்று நாயன்மார்களான வரலாறு உண்டு. நாயன்மார்களுள் அரசர், ஆண்டி, அடிமை, அந்தணர் , புலையர், குயவர், வண்ணார், சேனாதிபதி என பலவகையினர் உண்டு. நல்ல எண்ணம், நல்ல செயல், சிவநேயம் ஆகியவற்றால் நாயன்மார்களாயினர்.
ஒவ்வொருவரும் சன்மார்க்க வழியில் நின்று எவ்வுயிரும் தம்முயிர்போல் மதித்து அன்பு செய்து வாழ்ந்து இறவாபெருநிலை அடைய முயற்சிப்போம்.
அருட்பெரும்சோதி! அருட்பெரும்சோதி!!
தனிப்பெரும்கருணை! அருட்பெரும்சோதி!!