வள்ளலாருக்கு நடந்த திருமணம்:
திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் இல்லறத்தார். திருமணம் செய்துகொள்ளாதவர் துறவறத்தார். சங்ககாலத்தில் இல்லறம் மிகுதியாக போற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத்தில் சமண, பௌத்த சமயங்கள் தமிழகத்தில் வளர்ச்சிபெற்றது. அதன் பயனாக, துறவறத்தார் மிகுதியானார்கள். ஆனால் இவர்கள் துறவறத்தில் இருந்தாலும், சமணப் பள்ளிகளில் மற்றும் மலைக்குகைகளில் வாழ்ந்து, இல்லறத்தார்க்கு மிகவும் உதவியாக இருப்பார்கள்.
சமய போதனைகள் செய்து, கல்வியையும் நன்நெறிகளையும் வளர்த்தனர். இவர்கள் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பாடுபட்டனர். இதனால், துறவிகளுக்கு மக்களிடையே பெரும் மதிப்பு ஏற்பட்டது. சங்கம் மருவிய காலத்தில் துறவறத்தார் போற்றப்பட்டனர்.
19-ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு சமயம் மற்றும் சமுதாய வாழ்விலும் ஈடுபடலாம், என்பதற்கு சான்றாக வடக்கில் இராமகிருஷ்ண பரமஹம்சரும், தெற்கில் இராமலிங்கரும் வாழ்ந்தனர்.
Ramakrishnar with his wife Sharada Devi
சகோதரி உண்ணாமுலையின் மகள் தனகோடி அம்மாளை திருமணம் செய்துவிக்க இராமலிங்கத்தின் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.
திருவொற்றியுருக்கு சென்று தன்னை திருமணபந்தத்தில் சிக்க வைத்ததற்காக இறைவனிடம் கண்கலங்கி முறையிட்டார். அத்திருக்கோயிலில் தினமும் தான் சந்தித்து உரையாடும் சிவயோகியிடம் தனது திருமண ஏற்பாடுகள் பற்றி கவலையுடன் முறையிட்டார். அதற்கு தவயோகி 'தாய் சொல்லை தட்டாதே' இறைவனின் சித்தப்படி அனைத்தும் நடைபெறும் . கவலை வேண்டாம் என அறிவுறுத்தினார். இராமலிங்கரும் அவரது வாக்கினை குருவாக்காக கொண்டு, திருமண ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனமாக இருந்தார் நமது அடிகளார்.
தனகோடி அம்மாளுக்கும் இராமலிங்கருக்கும் நல்ல முறையில் திருமணம் நடைபெற்றது.
ஆனால் இராமலிங்கரை பொருத்தவரை "மணம்" என்றால் இறைவனோடு ஆன்மா சென்று கூடுவதைத்தான்.