Wednesday, 27 April 2016

Vallalar Varalaru Contd.....


பள்ளியறையில் மணப்பெண் அலங்காரகோலத்தில் இருக்க இராமலிங்கரோ சிறிதும் சிற்றின்ப ஆசை இன்றி முதலிரவு முழுவதும் "திருவாசகம்" புத்தகத்தினை ஓதிக் கொண்டிருந்தார்.  அவர் கண்களில் நீர் பெருகிற்று.

 அவரின் நிலையைக்கண்ட தனக்கோடி அம்மாளுக்கு தன் கணவர் ஒரு சாதாரண மனிதரில்லை  என்று  உடனே உணர்ந்தது  கொண்டார்.   
இராமலிங்கரின் மனம் இளவயது முதற்கொண்டு வேறொன்றில் இலயித்து போனதால் மற்றதில் நாட்டமில்லை.  இரவுகள்   பல வந்தன.  இராமலிங்கரின் செயலில் மாற்றமில்லை.  திருவாசகம் படிப்பது தினந்தோறும் தொடர்ந்தது.
தனகோடி அம்மாளும் இராமலிங்கரின் ஞான நிலையை புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருந்தார்.

இராமலிங்கர் அவரது திரு அருட் பா-வில், திருமண உறவிலும் தான் பூண்ட துறவொழுக்கத்தை,

             "முனித்த வெவ்  வினையோ நின்னருட் செயலோ 
 தெரிந்திலேன் மோகமே லின்றித் 
 தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்
 ஒருத்தியைக் கைத்தொடச் சார்ந்தேன் 
 குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் 
 கலப்பினேன் மற்றிது குறித்தே 
                பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் 
 பகர்வதென் எந்தை நீ அறிவாய் "
                                                                                            -திருஅருட்பா 

பற்றி பாடியுள்ளதால் அவரின் உள்மனம் நன்கு விளங்குகின்றது.  நாளடைவில் அவரின் அருட் தாகத்தை உறவினர்களும் புரிந்து கொண்டனர். இராமலிங்கருக்கு இல்லறத்தில் ஈடுபாடு இல்லையே தவிர, அவர் இல்லறத்தில் உள்ளவர்களை வெறுக்கவில்லை.  தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையில்லாதது, பிறருடைய வாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம் என்பதை  நன்கு உணர்ந்திருந்தார்.

இராமலிங்கரின் நண்பர் இறுக்கம் ரத்ன முதலியார், தமது திருமண ஆலோசனை குறித்தும், தம்மை வந்து வாழ்த்த வேண்டுமென கடிதம் வாயிலாக எழுதிக் கேட்டு கொண்டதற்கிணங்க,  அடிகளார் எழுதிய பதில் கடிதத்தில் சில பகுதிகள் ;

"சிரஞ்சீவி நமது ரத்ந முதலியாருக்கு சிவா கடாக்ஷத்தினால் தீர்காயுளும், சகல சம்பத்தும் மேன்மேலும் உண்டாவதாக,--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பரம சிவத்திடைத்தே மாறாது மனத்தை வைத்துக் கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்து கொள்ளலாம்.  அன்றியும் விவாகஞ்செய்து கொண்டாலும் அதனால் வருத்தப்பட நம்மை சிவபெருமான் செய்விக்க மாட்டார்.  ஆதலால் சந்தோஷமாக விவாகத்துக்கு சம்மதிக்கலாம்.  தாம் தடை செய்ய வேண்டாம்-"   --என்று

 திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்குமாறு இராமலிங்கர் எழுதியிருந்தார்.
ஆனால்  இராமலிங்கர் திருமணத்திற்கு செல்லவில்லை. ஆனால்  கடிதத்தில் (10-06-1860) வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் சில பகுதிகள்


                                                                      சிவமயம்
"சிரஞ்சீவி ரத்ந முதலியாரவர்களுக்கு நடராசானுக்கிரகத்தால் சிவாக்கியானமும் தீர்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக.  தங்கள் மணக்கோலத்தை காண கொடுத்து வைக்காதவனாகவிருந்தாலும்  கேட்டு மகிழும்படி பெற்றேன்.  தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி தெரிவிக்க வேண்டும்.  தங்கள் சிவசிந்தனை விடாமல் சர்வ ஜாக்கிரதையோடு லௌகீகத்தை நடத்தி வர வேண்டும்".

 இராமலிங்கர் எழுதிய இரண்டு கடிதங்களே   "தனக்கு பொருந்தாது என்று தன்னால் முடிவு செயப்பட்ட இல்லறவாழ்வு பிறரும் ஏற்க கூடாது என்கிற எண்ணம் இராமலிங்கருக்கு இல்லை.

மேலும் இறுக்கம் ரத்னா முதலியாருக்கு இராமலிங்கர் எழுதிய கடிதத்தில்
"தங்களுக்கு புத்திர பேறு உண்டாயிற்றென்று கேள்விப்பட்டு அளவு கடந்த சந்தோஷத்தை அடைந்தேன்". -என்று குறிப்பிட்டுள்ளார் .

இதன் மூலம் வள்ளலார் பெண்களையும் இல்லற வாழ்வையும் வெறுப்பவர் அல்ல என்பதை அன்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.