சென்னை சோமு செட்டியார் வீட்டில் சொற்பொழிவு நிகழ்த்தியபின் இராமலிங்கரின் அறிவாற்றலும், புகழும் சென்னை நகரம் எங்கும் பரவிற்று. சொற்பொழிவாற்றுவதிலும், பாடல் இயற்றுவதிலும், ஆன்மிக அனுபவத்தை பெறுவதிலும் படிப்படியாக தம் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.
தம்பியின் சிறப்பை ஓரளவு உணர்ந்த சபாபதி பிள்ளை, ஒருநாள் இராமலிங்கரின் சொற்பொழிவை மறைந்து நின்று கேட்டார். இராமலிங்கரின் உள்ளொளி பெருக்கை தமையனார் உணர்ந்து கொண்டார். அது முதல் அண்ணன் அண்ணிக்கும் இவரிடத்தில் பெருமதிப்பு உண்டாகிற்று. அவர்கள் காட்டிய மரியாதை, இவரின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக தோன்றியது. வீட்டில் இயல்பாக இருக்கமுடியாமல் தவித்தார் நம் வள்ளல் பெருமகனார்.
திருவுடை அம்மன் உடனாய தியாகராஜர் திருக்கோயில்,
திருவொற்றியூர், சென்னை.
இக்காலகட்டத்தில், இராமலிங்கர் தனிமையை கருதி நாள்தோறும் திருவொற்றியூர் சென்று வரலானார். திருவொற்றியூர் தியாகேசர் மீது பக்தி பாடல்கள் இயற்றினார். தியாகேசர் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டதால் பெரும்பாலான நாட்களை திருவொற்றியூரில் கழித்தார். 12-வயதில் தொடங்கி 35-வது வயது வரை சுமார் 23-ஆண்டு காலம் வள்ளலார் திருவொற்றியூர் தியாகேசரையும், வடிவுடை அம்மனையும் வழிபட்டார்.
அன்றாடம் திருவொற்றியூர் சென்று திரும்பும் போது, சற்று காலம் கடந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு மூடியிருந்த நிலையில் திண்ணையில் படுத்து விட்டார். சற்று நேரம் கழித்து தம் "அண்ணியார்" உணவு கொடுக்க வாங்கி உண்டு விட்டு படுத்தார்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து இராமலிங்கரின் அண்ணி இவரை எழுப்பி உணவு உண்ணுமாறு கூற, இராமலிங்கர் வியப்புடன் " சற்று நேரம் முன் நீங்கள் தானே! எனக்கு உணவு உண்ண கொடுத்தீர்கள்? நானும் உண்டேனே! தற்போது ஏன் மீண்டும் எழுப்புகிறீர்கள் என கேட்டார்.
அண்ணியாரும் வியப்புற்று "நான் இப்போது தான் உணவு கொண்டுவருகிறேன் என்றால் வந்தது யார்" என ஐயமுடன் வினவ , இராமலிங்கரும், தாயுள்ளத்தோடு வந்து எனக்கு உணவளித்தது அந்த வடிவுடை அம்மனைத் தவிர யாராக இருக்கமுடியும்! எனத் தெளிந்தார்.
இந்நிகழ்ச்சியை இராமலிங்கர் தனது "அருள் விளக்க மாலை" என்னும் பகுதியில் இறைவியால் தனக்கு உணவளிக்கப்பட்டது பற்றி பாடியுள்ளார்.

" தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திரு அமுதோர் திருகரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றனையங் கெழுப்பி
உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே"
என்றும்,
" இருள் இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே"
என்றும் வடிவுடை அம்மனின் அருளைப் பாடுகின்றார்.