Monday, 18 April 2016

Vallalar Varalaru Cont.....(Poliarutpa Maruppu: Vallalar Sandal; thirumurai)



வேலாயுத முதலியார், இராமலிங்கரின் பாடலை தொகுத்து அதற்கு "திருஅருட்பா" என பெயரிட்டு முதன்முதலில் 1867-ஆம் ஆண்டு வெளியிட்டார்.  இவர்  காலத்தில் வெளிவந்த " போலியருட்பா மறுப்பு" என்னும் நூலுக்கு மறுப்பாக, வேலாயுத முதலியார்  "போலி யருட்பா மறுப் பென்னும் குதர்க்காரன்ய நாச மகா பரசு" என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.  வடமொழியிலும் வல்லுநரான இவர்,  சென்னை ,மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இவர்,  திருஅருட்பாவை தொகுத்து, முதல் நான்கு திருமுறைகள் 1867-ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.  வேலாயுத முதலியார் தொகுத்ததில், இராமலிங்கரால், ஒற்றியூர் வழிப்பாட்டு காலத்தில், பாடப்பட்ட  அருட்பாடல்கள் இரண்டாம் திருமுறையின் பெரும்பகுதியிலும், மூன்றாம் திருமுறை முழுவதிலும்  இடம் பெற்றுள்ளன.

மேலும், வீராசாமி முதலியார், சீனிவாச வரதாச்சாரியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை , ஆறுமுக அய்யா என பல மாணவர்கள், இராமலிங்கரிடத்தில் தமிழ் கற்கவும், தெய்வீக உறவிற்காகவும், அனுபவம் பெறுவதற்காகவும் அவரிடத்தில் இருந்தனர்.  இதனால் அவருக்கு தனிமை என்பதே அரிதாகிப் போனது.

தியானம் செய்வதற்காக இவருக்கு தனிமை தேவைப்பட்டது.  சில சமயங்களில் இவர் சென்னையின் சுற்றுப்புறங்களில், அதாவது , பல்லாவரம், பிருங்கி மலை, திருநின்றவூர் , திருமயிலை , மந்தவெளி , திருவான்மியூர், புழலேரி, செங்குன்றம்  போன்ற பகுதிகளிலெல்லாம் தங்கியிருந்து தனிமையில,  திருவருளை நாடியிருந்தார்.  வள்ளலார் பாதம் பட்ட, தங்கிய இடங்களிலெல்லாம் சென்னை நகர்ப்புறங்களில் இன்று வாழும் மக்கள் எத்துணை! புண்ணியம் செய்தவர்கள்! என்றே நினைக்க தோன்றுகிறது.

ஊர் புறத்தே இருந்த காடுகளிலும், மேடுகளிலும் திரிந்துற்ற இளைப்பை வள்ளலார் "திருஅருட்பா" -வில் குறிப்பிடுகின்றார்.


"தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் 
   சிலுகுறும் என்னுளம் பயந்தே 
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே 
    நண்ணினேன்; ஊர்ப்புறம் அடுத்த 
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் 
   களத்திலே திரிந்துற்ற இளைப்பை 
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் 
  எந்தைநீ அறிந்தது தானே!"

என்ற வரிகள் மூலம் சென்னையின் சுற்றுவட்டாரத்தில் தனிமையை நாடி திரிந்ததை அறிந்துகொள்ளலாம்.

அந்த காலத்தில் இறையருள் நாட்டம் மிக்க யோகிகள், செருப்பு அணிந்து கொள்ள மாட்டார்கள்.   ஆனால் வள்ளலார்,  செருப்பு அணிந்து கொண்டிருந்தார்.

vallalar slipper
சென்னையில், இவரது தவ வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது.  தம்பியின் வளர்ச்சி கண்டு அண்ணன் சபாபதி பிள்ளை மிகவும் மகிழ்ந்தார்.  இராமலிங்கருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.