சொற்பொழிவு ஆற்றும் இடங்களில் அதற்காக தரும் சன்மானத் தொகையை இராமலிங்கரிடத்தில் கொடுப்பர். அவ்வாறு கிடைக்கும் பணத்தை வரும் வழியில் கிணற்றிலோ, குளத்திலோ வீசி எறிந்து விடுவார் நமது வள்ளலார். இதனை,
"பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலை
நான் படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலே எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய் "
என்று தம் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
இராமலிங்கர் பொருளாசையின்றி அதனை எரிந்துவிடுவதை கண்ட சோமு செட்டியார் சன்மானத்தை நேரடியாக சபாபதி பிள்ளையிடம் அளித்து வரலானார். ஆதலால், இராமலிங்கரது குடும்பம் வறுமையின்றி வாழ முடிந்தது.
சிறுவயதிலேயே இராமலிங்கரின் திறமையை அறிந்த, இராமலிங்கரின் ஆசிரியராக இருந்த சபாபதி முதலியார், இராமலிங்கரை சந்தித்து, குழந்தைகள், பெரியவர்கள் உள்பட அனைவரும் படித்து பயன் பெரும் வகையில் நூலொன்றை எழுதித் தருமாறு வேண்டிக் கொண்டார். இராமலிங்கரும், ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்கி எழுத ஆரம்பித்தார். அதுதான் "மனுமுறை கண்ட வாசகம்".
பெரியபுராணத்தில் உள்ள மனுநீதி கண்ட புராணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இந்நூல் ராமலிங்கரின் மொழித் திறமைக்கு, சான்றாக விளங்குகிறது. அந்த அற்புத நூலை வள்ளலார்,
"நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங்கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சிநேகரை கலகஞ் செய்தேனோ!"
எனத் தொடங்கியிருப்பார் . சென்னை சாஸ்த்திர விளக்க சங்கத்தினரால் 1854 ஜூன் மாதம் வெளியானது.
பின் தன் அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து ஒழிவிலொடுக்கம், சிவநேச வெண்பா, இங்கித மாலை, மகாதேவ மாலை, நெஞ்சறிவுறுத்தல் என பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வரலானார்.
"தொண்ட மண்டல சதகம்" படிக்காசு புலவர் எழுதிய நூல். இந்நூல் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தீர்க்கவேண்டி அய்யாசாமி முதலியார் என்பார் இராமலிங்கரை அணுகி சரியானது எது என விளக்கி கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
இராமலிங்கரும் கல்வெட்டுகள், சுவடிகள் என ஆராய்ந்து, "ஆதொண்டன் என்ற மன்னன் ஆண்ட பகுதி இது, அதனை பற்றிய நூல்தான் இஃது" . எனவே தொண்ட மண்டல சதகம் என அழைப்பதே தீர்வானது என கூறினார். இராமலிங்கரே தமிழ் நாட்டின் முதல் கல்வெட்டு ஆய்வாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அய்யா சாமியின் வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் தன் ஆய்வை "நூற்பெயர் இலக்கணம்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.
அதுமுதல் இராமலிங்கரின் புகழ் அதிகமாக பரவியது. இவர் ஓர் தமிழ் அறிஞராக மதிக்கப்பட்டார். தன் சொல்லாற்றல் மிக்க பாடல்களால் புகழ் பெற்றார்.
மனுமுறை கண்ட வாசகம் மற்றும் தொண்ட மண்டல சதகம் ஆகியவை திருவருட்பா -வில் உரைநடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இராமலிங்கரின் முதல் மாணவர்:
இராமலிங்கரின் ஆற்றல் வெளிப்பட வெளிப்படச் சாதாரண மக்கள் முதல் கற்றவர், அறிஞர் வரை இவரை அணுகினர். தமிழ் அறிவிற்காக, தெய்வீக உறவிற்காக, மருத்துவ குறிப்பிற்காக, ரசவாத வித்தைக்காக, சமய கருத்துக்களுக்காக என பலதரப்பட்டவர் நாடி வந்தனர்.
அவ்வாறு வந்தவர்களுள் சிலர், இவரின் அன்பர்களாயினர். சிலர் மாணவர்களாயினர். அதில் குறிப்பிடத்தக்கவர் தொழுவூர் வேலாயுத முதலியார். 1849-ஆம் ஆண்டு வேலாயுத முதலியார் மாணவராக சேரும் போது அவருக்கு அகவை 17. வள்ளலாருக்கு வயது 26, என ஊரன் அடிகள் குறிப்பிடுகிறார்.
இராமலிங்கரிடம் காணப்பட்ட தமிழ் புலமையின் புகழ் பரவியதால் அவருடைய தமிழறிவை சோதிக்க சென்றவர்தான் தொழுவூர் வேலாயுதம் பிள்ளை.
தொழுவூர் வேலாயுதம் பிள்ளை