மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"
-கந்தர் அநுபூதி
வள்ளலார் தொடக்க காலத்தில் இறைவனை பலவடிவங்களில் வணங்கினார். முருகன், சிவலிங்கம், நடராஜர் என்ற மூன்று வடிவங்கள் அவர் உள்ளத்தை கவர்ந்தன. அதில் கண்கண்ட தெய்வமாய், குருவாய் திகழ்ந்தவர் முருகன். அவர் வணங்கிய ஆறுமுகக்கடவுள் குருவாய் நின்று அவர் உள்ளத்தில் அணையாத ஆத்ம ஜோதியை ஏற்றி வைத்தார்.
வள்ளலார் வழியில் செல்ல நினைப்பவர்கள் முருகனை வழிபடுகுருவாகக் கொள்ளலாம். கந்தகோட்டத்தில்தான் "இரந்து இரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற ஜோதியே" என்ற மாணிக்கவாசகரின் இறையனுபவத்தை தானும் உணர்ந்தார்.
கந்தகோட்டத்தில் மெய்மறந்து தியானத்திலமர்ந்து அருட்பாடல்களை பாடியருளினார். அதுதான் தெய்வ மணிமாலையும், கந்தர் சரணபத்தும் ஆகும். வள்ளலாரால் முதலில் பாடப்பெற்றது தெய்வமணிமாலை. அதில் முதற்பாடல் " திருவோங்கு புண்ய செயல் ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம் ஒங்க" எனத்தொடங்குகிறது. இப்பாடல் அருட்பாவின் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் பாடப்பெற்ற பிறகே, திருப்பணி செய்யபெற்று கோயிலும் சிறப்புற்று விளங்கியது. கந்தகோட்டத்தை முதன்முதலில் பாடியவர் இராமலிங்கரே ஆவார்
இவரின் அருட்தாகத்தை, வள்ளலார் ஓர் அவதார புருஷர் என்பதை, இவரது ஆசிரியர் சபாபதிமுதலியார் மகிழ்வோடு கண்டுகொண்டார்.
தனது அண்ணனின் கட்டளைக்குபின் வீட்டின் பின்புற வாயில் வழியாக இராமலிங்கர் போய் உணவு உண்டு வருவது வழக்கமாகும். அன்று அவரது தந்தையின் நினைவு நாள். அதனால் உற்றார் உறவினர் அனைவருக்கும் மதிய உணவை அளித்தனர். பலரும் வந்து சென்ற பின், கணவரின் ஆணையை மீறி இராமலிங்கருக்கு ஆறிப்போன உணவை பரிமாற நேர்ந்த போது, பாப்பாத்தியம்மாளின் தாயுள்ளம் கண்ணீர் சிந்தியது. மனம் தாளாமல் ராமலிங்கரிடம் "இப்படி நடந்து கொள்கிறாயே, உன் அண்ணனின் சொற்படி பள்ளிக்கு சென்றால் உனக்கு இந்த நிலையில்லையே" என கண்ணீர் விட்டு வருந்தினார்.
தம் அண்ணியின் கண்ணீரையும், அரவணைப்பும் கண்டு மனம் வருந்தி தம் செயலை மாற்றிக்கொண்டு வீட்டிலேயே அமர்ந்து படிக்க முடிவு செய்தார். இனிமேல் நம் வீட்டு மாடியிலுள்ள தனியறையில், தனியே தங்கி படிக்கிறேன், என்று அண்ணன் அண்ணியிடம் உறுதி கூறுகிறார்.
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு டைத்து ."
நாம் கற்று உணர்ந்தவை பிறவிகள்தோறும் உடன்வந்து நமது வாழ்க்கைக்கு துணை நிற்கும். இதுவே இயற்கையின் நியதி. நமது இராமலிங்கரின் அருளும் ஆற்றலும் இத்தகையதே.
வள்ளலார் கண்ட முருகன்
இராமலிங்கரும் நிலைக்கண்ணாடி ஒன்றும், சுகந்த ஊதுபத்திகளும் வாங்கி வந்து தமது அறையில், மாடியில் வைத்துக்கொண்டார். பக்தி என்பது நமது உள்ளுணர்வை மேம்படுத்தி வாழ்வின் சரியான திசைக்காட்டியாக அமையும். ராமலிங்கர் நிலைக்கண்ணாடிமுன் ஐந்து முக குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். அதன் எதிரில் மனம் ஒன்றி தியானத்தில் அமர்ந்தார். சிறுவயது முதற்கொண்டே முருகனை வழிபடு கடவுளாக கொண்டிருந்ததால், அவரைக்காண ராமலிங்கரின் மனம் விழைந்தது. அவரது மனத்தெளிவும், மனஒருமைப்பாடும் அவரை முருகனை காணவைத்தது. தணிகைமுருகனை கண்ணாடியில் கண்டார். ஆறுமுகத்தோடும், பன்னிருதோள்களோடும், வேலோடும், மயிலோடும், கோழிக்கொடியோடும் திருத்தணிகை முருகன் கண்ணாடியில் காட்சித்தந்தான். நம் வள்ளல்பெருமான் அவரை கண்குளிரக்கண்டார்.
இவர் காலத்தில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் காளிதரிசனம் பெற்றதும்; திரு பாம்பன் சுவாமிகள் முருகதரிசனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.