தொழுவூர் வேலாயுதம் முதலியார், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். நல்ல புலமை மிக்கவர். இவர் இராமலிங்கரின் மொழிப் புலமையை சந்தேகித்தார். "இராமலிங்கரை மக்கள் தமது அறியாமையால் தான் கொண்டாடுகின்றனர்" என்றும் "அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய திறமைசாலியாக இருக்க முடியாது" என்றும் நம்பினார். தானே நேரில் சென்று இராமலிங்கரை சோதித்து விடுவது என முடிவு செய்தார்.
மிகக் கடினமான சொற்களைக் கொண்டு சில கவிதைகளை தாமே புனைந்தார். அவற்றை எடுத்துக் கொண்டு இராமலிங்கரை சந்தித்தார். அய்யா! இவை மிகவும் பழமையானது. என் வீட்டு பரண் மேல் இத்தனைக் காலம் யாரும் கவனிக்காமல் இருந்தது. நீங்கள் இதனை படித்து புரியும் படியாக விளக்கி பொருள் சொன்னால் நன்றாயிருக்கும். என்று கூறி அந்த கவிதைகளை இராமலிங்கரிடம் காட்டினார்.
அதனை வாங்கிப் பார்த்த இராமலிங்கர், நம்மை சோதிப்பதற்காகவே இதை கொண்டு வந்திருக்கிறார், என்பதை உடனே உணர்ந்து கொண்டார். மேலும், இந்த பாடல்கள் பழங்காலத்தவை அல்ல! யாரோ இலக்கணம் தெரியாதவர் இதனை எழுதியிருக்க வேண்டும். சங்க பாடல்களில் இவ்வளவு தவறு இருக்காது என திட்டவட்டமாகக் கூறினார். சோதிக்க வந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வெட்கி தலை குனிந்தார்.
தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இராமலிங்கரும் இவரை மன்னித்து சீடராக ஏற்றுக்கொண்டார். இராமலிங்கரின் புகழ் பரவியது போல், இராமலிங்கரின் மாணவரான வேலாயுத முதலியாரின் பெருமையும் பல்கி பெருகியது. அவரது அறிவு திறத்தை பாராட்டி, "உபய கலாநிதிப் பெரும் புலவர்" என்ற பட்டத்தையும் தொழுவுராருக்கு சுட்டினார் நமது வள்ளலார். சீடர்களில் தலைசிறந்தவராக தொழுவுரார் விளங்கினார்.