வள்ளலாரின் குழந்தைப் பருவம்:

சிதம்பரம் இராமலிங்கம் 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் வாழ்ந்தவர். இறைவனே சிவனடியார் வேடத்தில் வந்து குணவதியான சின்னம்மையாரை வாழ்த்தி அருள்வாக்கு நல்க , 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் சுபானு வருடம் மாலை 5-30 மணிக்கு மருதூர் என்னும் சிற்றூரில் ராமையா பிள்ளை- சின்னம்மையார் தம்பதிக்கு 5-வது மகவாக பிறந்தார் .
பிள்ளைக்கு இராமலிங்கம் என பெயரிட்டு அழைத்தனர். பிறந்த பிள்ளையை தில்லை சிதம்பரத்திற்கு பெற்றோர் எடுத்து சென்றனர். ஆலய மணி ஒலிக்க, தீட்சிதர் கற்பூர ஆராதனை காட்ட அம்பலத்தரசரையும், கற்பூர ஜோதியையும் ஒருங்கே இமைக்கொட்டாது விழித்து பார்த்த குழந்தை ராமலிங்கம் 'கலகல' என நகைக்க, தீட்சிதர் இக்குழந்தை அம்பலவாணரின் அருட்குழந்தை என வாழ்த்தி இல்லம் அனுப்பினார்.
உலகிலேயே மிகச் சிறந்த ஆலய மணி சிதம்பர தலத்தில் விளங்கும் சிகண்டி பூர்ணம் என்ற ஆலய மணியாகும்.இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்திவிடும் தன்மை கொண்டது .தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புவோர் இந்த சிகண்டி பூரண மணி ஓசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம் .வள்ளல் பெருமானுக்கு அருள் வழங்கி அனுக்கிரகம் அளித்த இந்த மணிக்கு இணையான மணி உலகத்தில் வேறெங்கும் கிடையாது.
அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை (இத்தலம் ஆகாயதலமாக விளங்குகிறது) இறைவன் ஓராண்டு பருவத்திலேயே இராமலிங்கருக்கு வெளிப்படையாக காட்டியருளினார். இந்த அனுபவத்தையே தமது 49-வது அகவையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஏழு திரை நீக்கி ஒளியாக காட்டியருளினார்.
அவரது சிறுபிள்ளை பருவம் முதலே உள்வளர்ஒளியால் அவருக்கு தெய்வக்காட்சி அனுபவம் உண்டாகிக்கொண்டிருந்தது. இதனையே அவர் பல்வேறு பருவத்தில் இயற்றிய பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன.
"தாய்முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லை
தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
வேய்வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாக காட்டிய என்மெய் உறவாம் பொருளே "
எனவும்," அருட்பெருஞ்சோதியை கண்டேனே
ஆனந்தத் தெள்ளமுத துண்டேனே"
< எனவும் பாட்டுருவில் வெளிப்படுத்தியுள்ளார். இக்கருத்தால் தில்லை சிதம்பரத்திலே அடிகள் இறையருட்காட்சியை கண்டார் என அறியலாம்.
இராமலிங்கர் 50-ஆண்டுகள் 5-மாதம் வாழ்ந்தார் எனினும் தம் தந்தையுடன் ஐந்து மாதமே வாழ்ந்துள்ளார். தந்தை மகன் உறவு வெறும் 5-மாதங்கள் மட்டுமே.
கணவரின் மறைவுக்கு பிறகு சின்னம்மையார் தம் ஐந்து குழந்தைகளுடன் தாம் பிறந்த ஊரான சின்னகாவனத்திற்கு வந்து சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார்.