சின்னம்மையாரின் தாய்வீட்டின் வறுமை காரணமாகவோ, அல்லது வளரும் பிள்ளைகளின் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடியோ, சின்னம்மையார் தம் ஐந்து பிள்ளைகளோடு சென்னையில் குடியேறினார்.
அன்னையை போன்றவளல்லவா நம் சென்னை. வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என்ற சொற்றொடர் குறிப்பாக நம் சென்னைக்கு நன்கு பொருந்தும்.
19-ம் நூற்றாண்டு ஆன்மிகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம். மகான்களின் பாதம் சென்னையில் பதிந்தது. அவர்களுக்குள்ளிருந்த பக்திமொட்டு ஞான மலராய் மடலவிழ்ந்து மணம் பரப்பியது. ராமகிருஷ்ண பரமஹம்சர், தியாகராஜஸ்வமிகள், பாம்பன் சுவாமிகள் இவர்களெல்லாம் அவதரித்தது இந்த நூற்றாண்டுதான்.
சென்னையில் தங்கியிருந்த இடம்.

சென்னை நகரில் குடியேறியபோதும் குடும்பநிர்வாகம் தாய் சின்னம்மையாரின் மேற்பார்வையில் இருந்தது. வடசென்னையில் ஏழுகிணறு பகுதியில் வீரசாமிப்பிள்ளை தெரு 38-ம் எண்ணுள்ள வீட்டில் தங்கியிருந்தனர். இதே வீட்டின் இன்னொரு பகுதியில் இறுக்கம் இரத்தின முதலியாரும் தங்கியிருந்தார். இராமலிங்கரும் இவரும் நட்புக்குரியவர்களாக இருந்தார்கள்.
அண்ணனின் ஆதரவு :
இராமலிங்கரின் குடும்பம் சைவசமயத்தை சார்ந்ததால் அண்ணன் சபாபதி பிள்ளை சென்னையில் சமய சொற்பொழிவு மூலம் வருவாய் ஈட்ட தொடங்கினார். சிறுபிள்ளையாக இருந்த தம்பி இராமலிங்கரை தம் ஆதரவில், மனைவி பாப்பாத்தி அம்மாளின் துணையோடு வளர்த்து வந்தார். இராமலிங்கரின் தொடக்கக்கல்வி ஆசிரியராக இருந்து கற்பிக்க தொடங்கினார். இராமலிங்கரும் எண்ணையும் எழுத்தையும் விருப்பத்துடன் விரைந்து கற்றார்.
சபாபதி பிள்ளை, அப்போது புரசைவாக்கத்திலிருந்த தாம் கல்வி கற்ற, ஆசிரியர் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் (1792-1871) ,தம் தம்பி இராமலிங்கமும் படிக்க வேண்டும் என்ற ஆசையில் அவரிடம் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். தான் சமய சொற்பொழிவு ஆற்றி பொருள் ஈட்டுதல் போல இராமலிங்கரும் சொற்பொழிவு செய்யலாம் என எண்ணி, தன் தம்பியின் கல்வியில் அதிக கவனம் செலுத்தினார். 19-ம் நூற்றாண்டில் சமய சொற்பொழிவு செய்பவரே சமூகத்தில் எல்லோராலும் மிகவும் மதிக்கபடுபவராக திகழ்ந்துள்ளனர்.